அதற்குச் சாமுயேல், “நீ புத்தியீனமாய் நடந்துவிட்டாயே! உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த கட்டளையை நீ கைக்கொள்ளவில்லை. நீ அப்படிக் கைக்கொண்டிருந்தால் யெகோவா உன் அரசாட்சியை இஸ்ரயேலின்மேல் என்றென்றும் உறுதிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்பொழுது உன்னுடைய அரசாட்சியோ நிலைநிற்காது. யெகோவாவினுடைய கட்டளையை நீ கைக்கொள்ளாது மீறியதால், யெகோவா தன் இருதயத்திற்கு உகந்த மனிதனைத் தெரிந்து அவனைத் தன் மக்களுக்குத் தலைவனாக நியமித்திருக்கிறார்” என்றான்.