ஆதி 13

13
அத்தியாயம் 13
ஆபிராமும் லோத்தும் பிரிந்து செல்லுதல்
1ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள். 2ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான். 3அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், 4தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான இடம்வரைக்கும் போனான்; அங்கே ஆபிராம் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். 5ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள்#13:5 கூடாரங்களும் இருந்தன.. 6அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது. 7ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள். 8ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். 9இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான். 10அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது யெகோவாவுடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. 11அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். 12ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான். 13சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் யெகோவாவுக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள்.
ஆபிராம் எபிரோனுக்கு போனான்
14லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, யெகோவா ஆபிராமை நோக்கி: “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். 15நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து, 16உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும். 17நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எதுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என்றார். 18அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

Terpilih Sekarang Ini:

ஆதி 13: IRVTam

Highlight

Kongsi

Salin

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk