ஆதி 11

11
அத்தியாயம் 11
பாபேல் கோபுரம்
1பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. 2மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார்#11:2 பாபிலோன் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். 3அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. 4பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். 5மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார். 6அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள். 7நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார். 8அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள். 9பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல்#11:9 பாபிலோன் எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
சேமுடைய வம்சவரலாறு
10சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான். 11சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 12அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான். 13சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 14சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான். 15ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 16ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான். 17பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 18பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான். 19ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 20ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான். 21செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 22செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான். 23நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 24நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான். 25தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 2670 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
தேராகுடைய வம்சவரலாறு
27தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான். 28ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான். 29ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். 30சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள். 31தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள். 32தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.

Terpilih Sekarang Ini:

ஆதி 11: IRVTam

Highlight

Kongsi

Salin

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk