ஆதியாகமம் 17

17
உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனம்
1ஆபிராமுக்கு 99 வயதானபோது கர்த்தர் அவனுக்கு காட்சி தந்தார். அவர், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். எனக்குக் கீழ்ப்படிந்து எனக்கு முன்பாகச் சரியான வழியில் நட. 2நீ இவற்றைச் செய்தால், நமக்குள் ஒரு உடன்படிக்கையை நான் ஏற்படுத்துவேன். உனது ஜனங்களுக்காக ஒரு பெரிய நாட்டை ஏற்பாடு செய்வதாக வாக் குறுதி செய்வேன்” என்றார்.
3தேவனுக்கு முன் ஆபிராம் பணிந்து வணங்கினான். 4தேவன் அவனிடம், “நான் உன்னைப் பல நாடுகளின் தந்தையாக்குவேன். 5நான் உனது பெயரை மாற்றுவேன். இப்போது உனது பெயர் ஆபிராம், இனி உன் பெயர் ஆபிரகாம். நான் உன்னைப் பல நாடுகளுக்குத் தந்தையாக்கப் போவதால் இந்தப் பெயரை உனக்கு சூட்டுகிறேன். 6நான் உனக்கு அநேக சந்ததிகளை கொடுப்பேன். உன்னிடமிருந்து புதிய நாடுகள் உருவாகும். பல ராஜாக்கள் உன்னிடமிருந்து எழும்புவார்கள். 7நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன். 8நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார்.
9மேலும் தேவன் ஆபிரகாமிடம், “இது உடன்படிக்கையில் உனது பகுதியாகும். நீயும் உனது சந்ததியும் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்திருக்க வேண்டும். 10இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். 11உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம். 12ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 13எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 14இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார்.
ஈசாக்கு சத்தியத்திற்குரிய குமாரன்
15தேவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள். 16அவளை நான் ஆசீர்வதிக்கிறேன். அவள் உனக்கு ஒரு குமாரனைப் பெற்றுத்தரும்படி செய்வேன். நீயே அவன் தந்தை. சாராள் பல நாடுகளுக்குத் தாயாக இருப்பாள். அவளிடமிருந்து பல ராஜாக்கள் வருவார்கள்” என்றார்.
17ஆபிரகாம் தன் முகம் தரையில்படும்படி விழுந்து வணங்கி தேவனுக்கு மரியாதை செலுத்தினான். எனினும் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டே, “எனக்கு 100 வயது ஆகிறது. என்னால் ஒரு குமாரன் பிறப்பது கூடியகாரியமா? சாராளுக்கோ 90 வயது. அவள் ஒரு குமாரனைப் பெறுவது எப்படி?” என்றான்.
18ஆபிரகாம் தேவனிடம், “இஸ்மவேல் வாழ்ந்து உமக்குச் சேவை செய்வான் என நம்புகிறேன்” என்றான்.
19தேவன், “இல்லை. உன் மனைவி சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்று சொன்னேன். நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாய். நான் அவனோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வேன். அந்த உடன்படிக்கையே என்றென்றைக்கும் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் தொடரும்.
20“நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும். 21ஆனால் நான் என் உடன்படிக்கையை ஈசாக்கிடம் ஏற்படுத்துவேன். ஈசாக்கு சாராளின் குமாரனாயிருப்பான். அவன் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் பிறந்திருப்பான்” என்றார்.
22ஆபிரகாமிடம் தேவன் பேசி முடித்த பிறகு தேவன் அவனை விட்டு விலகிப் போனார். 23தேவன் ஆபிரகாமிடம் அவன் குடும்பத்திலுள்ள ஆண்களும், சிறுவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே, ஆபிரகாம் தனது குமாரன் இஸ்மவேல், மற்றும் அவனுடைய வீட்டில் பிறந்த அடிமைகளையும், பணம் கொடுத்து வாங்கிய அடிமைகளையும் கூட்டினான். ஆபிரகாமின் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும், சிறுவனும் அந்த நாளிலே, தேவன் ஆபிரகாமிடம் கூறியபடியே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.
24ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது. 25அப்போது ஆபிரகாமின் குமாரன் இஸ்மவேலுக்கு 13 வயது. 26ஆபிரகாமும் அவனது குமாரனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். 27அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர்.

하이라이트

공유

복사

None

모든 기기에 하이라이트를 저장하고 싶으신가요? 회원가입 혹은 로그인하세요

ஆதியாகமம் 17 동영상