மத்தேயு 18
18
பரலோக அரசில் பெரியவன்
1அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள்.
2அவர் ஒரு சிறு பிள்ளையைத் தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். 3அவர் அவர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றிக் கொண்டவர்களாக, சிறு பிள்ளைகளைப் போல் மாறாவிட்டால் நீங்கள் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்ல மாட்டீர்கள். 4ஆதலால், இந்தச் சிறு பிள்ளையைப் போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கின்றான்” என்றார். 5“இப்படி ஒரு சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
பாவம் செய்யப் பண்ணுதல்
6“ஆனால், என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை, எவராவது பாவம் செய்யப் பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே ஒரு பெரிய திரிகைக்கல்#18:6 திரிகைக்கல் என்பது தானியம் அரைக்கும் கல் கட்டப்பட்டு, கடலின் ஆழத்தில் தள்ளப்படுவது அவர்களுக்கு நலமாய் இருக்கும். 7மக்களைப் பாவம் செய்யப் பண்ணுகிற சோதனைகளின் காரணமாக, உலகத்திற்கு ஐயோ பேரழிவு! இப்படிப்பட்ட சோதனைகள் வர வேண்டியதே. ஆனால் யார் மூலமாக அது வருகின்றதோ அந்த மனிதனுக்கு ஐயோ பேரழிவு! 8உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்து போடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைவிட, ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. 9உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத் தோண்டி எறிந்து விடு. இரு கண்ணுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைவிட, ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது.
வழிதப்பிய செம்மறியாடு பற்றிய உவமை
10“நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையாவது அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைதூதர்கள், எனது பரலோக பிதாவின் முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 11ஏனெனில் வழி தவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மனுமகன் வந்திருக்கிறார்.#18:11 சில மூலபிரதிகளில் லூக்காவில் இருக்கின்ற இந்த வசனம் காணப்படுகிறது. லூக். 19:10
12“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு செம்மறியாடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழி தவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போக மாட்டானோ? 13நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழி தவறிப் போகாத தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளைவிட, அந்த ஒரு செம்மறியாட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான். 14அதுபோலவே, இந்த சிறியவர்களில் ஒருவனாவது வழி தவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் திட்டமல்ல.
எனக்கெதிராய் பாவம் செய்த சகோதரன்
15“உன் சகோதரன்#18:15 சகோதரன் – இதை, உன் குழுவைச் சேர்ந்தவர், சக விசுவாசி, சகோதரி என்றும் மொழிபெயர்க்கலாம். 21ம், 35ம் வசனங்களிலும் காணப்படுகிறது. உனக்கு எதிராகப் பாவம் செய்தால், நீ போய் அவனுடைய குற்றத்தை அவனுக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே, அது செய்யப்படட்டும். அவன் அதை ஏற்றுக்கொண்டால், நீ உனது சகோதரனை இழக்காமல் காத்துக்கொள்வாய். 16ஆனால் அவன் ஏற்றுக்கொள்ளாவிட்டால், வேறு ஒருவரையோ, இருவரையோ உன்னுடன்கூட அழைத்துக்கொண்டு போய், அதைத் திரும்பவும் சொல்லு. ஏனெனில், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சியங்களின் மூலமாக உறுதி செய்யப்பட வேண்டுமென, இறை வார்த்தையில் சொல்லப்பட்டுள்ளது.’#18:16 உபா. 19:15 17அவர்கள் சொல்வதையும் அவன் கேட்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; திருச்சபை சொல்வதையும் அவன் கேட்க மறுத்தால், இறைவனை அறியாத ஒருவனைப் போலவும், அநியாயமாய் வரி சேகரிக்கின்ற#18:17 அநியாயமாய் வரி சேகரிக்கின்ற – கிரேக்க மொழியில் வரி சேகரிக்கின்றவன். அந்நாட்களில் ரோமருக்காக வரி சேகரிக்கின்றவர்கள், சமூகத் துரோகிகளாகக் கருதப்பட்டனர். ஒருவனைப் போலவும் அவனை நடத்து.
18“மேலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் எதைப் பூமியில் தடை செய்கின்றீர்களோ, அது பரலோகத்திலும் தடை செய்யப்படும்.#18:18 தடை செய்யப்படும் – கிரேக்க மொழியில் கட்டப்பட்டிருக்கும் எதைப் பூமியில் அனுமதிக்கிறீர்களோ, அது பரலோகத்திலும் அனுமதிக்கப்படும்.#18:18 அனுமதிக்கப்படும் – கிரேக்க மொழியில் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்
19“திரும்பவும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் இணக்கம் கொண்டால், பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவினால், அது உங்களுக்காகச் செய்யப்படும். 20ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரில் ஒன்றாய்கூடி வருகின்றார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கின்றேன்” என்றார்.
இரக்கமற்ற வேலையாள்
21அதன்பின் பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை வரைக்குமோ?” எனக் கேட்டான்.
22இயேசு மறுமொழியாக, “ஏழு முறை அல்ல, ஏழு எழுபது முறைக்கும் அதிகமாக#18:22 ஏழு எழுபது முறைக்கும் அதிகமாக என்பது கணக்கிட முடியாதளவு என்று நான் உனக்குச் சொல்கின்றேன்” என்றார்.
23“பரலோக அரசானது, ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்தது போல் இருக்கின்றது. 24அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்தாயிரம் தாலந்து#18:24 பத்தாயிரம் தாலந்து – இது ஒருவருடைய 20 வருட சம்பளத்துக்குச் சமனான பெருந் தொகைப் பணம் பணம் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான். 25அவனோ அதை செலுத்த முடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான்.
26“வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்மீது பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக் கேட்டான். 27வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான்.
28“ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு தினாரி#18:28 நூறு தினாரி – ஒரு தினாரி ஒருவருடைய ஒரு நாள் சம்பளத்துக்குச் சமனான பணம் பணம் கடன்பட்டிருந்த தன் சக வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து கழுத்தை நெரித்து, ‘நீ என்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான்.
29“அவனுடைய சக வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்மீது பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக் கேட்டான்.
30“ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும்வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான். 31நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் எஜமானுக்குப் போய்ச் சொன்னார்கள்.
32“அப்போது எஜமான் வேலைக்காரனை அழைத்து, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடன்களையெல்லாம் ரத்து செய்தேன். 33நான் உன்னில் இரக்கம் காட்டியது போல, நீயும் உனது சக வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான். 34அவனுடைய எஜமான் கோபம்கொண்டு, அவன் கடன்பட்டதை முழுவதும் கொடுத்துத் தீர்க்கும்வரை, அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி, சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.
35“நீங்களும் உங்கள் சகோதரனை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார்.
Արդեն Ընտրված.
மத்தேயு 18: TRV
Ընդգծել
Կիսվել
Պատճենել
Ցանկանու՞մ եք պահպանել ձեր նշումները ձեր բոլոր սարքերում: Գրանցվեք կամ մուտք գործեք
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.