ஆதியாகமம் 35

35
பெத்தேலில் யாக்கோபு
1தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது உனக்குக் காட்சி தந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை அமைத்து அங்கு தேவனைத் தொழுதுகொள்” என்றார்.
2எனவே, யாக்கோபு தன் குடும்பத்தார் வேலைக்காரர்கள் அனைவரிடமும், “உங்களிடம் உள்ள மரத்தாலும் உலோகங்களாலும் செய்யப்பட்ட அந்நிய தெய்வங்களையெல்லாம் அழித்துப்போடுங்கள். உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். 3நாம் இந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குப் போகிறோம். அங்கே எனக்குத் துன்பத்தில் உதவிய தேவனுக்கு நான் பலிபீடம் கட்டப்போகிறேன். அந்த தேவன் நான் எங்கு போனாலும் என்னோடு இருக்கிறார்” என்றான்.
4எனவே, ஜனங்கள் தம்மிடம் இருந்த அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதுகளில் அணிந்திருந்த வளையங்களையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவற்றை சீகேம் நகருக்கருகில் இருந்த ஒரு கர்வாலி மரத்தின் அடியிலே புதைத்துவிட்டான்.
5யாக்கோபும் அவனது குமாரர்களும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனபோது, அப்பகுதியில் உள்ள ஜனங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து போய் அவர்களைக் கொலைசெய்ய விரும்பினார்கள். ஆனால் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பயம் அவர்களுக்கு ஏற்பட்டபடியால் அவர்கள் யாக்கோபைப் பின்தொடரவில்லை. 6எனவே, யாக்கோபும் அவனைச் சேர்ந்தவர்களும் கானானிலுள்ள லூசை அடைந்தனர். லூஸ் இப்போது பெத்தேல் என்று அழைக்கப்பட்டது. 7யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அதற்கு “ஏல் பெத்தேல்” என்று பெயரிட்டான். காரணம் அவன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது தேவன் அந்த இடத்தில் தான் அவனுக்கு முதலில் காட்சியளித்தார்.
8தெபோராள் எனும் ரெபெக்காளின் தாதி அங்கு மரித்துபோனாள். பெத்தேலில் கர்வாலி மரத்தின் அடியில் அவளை அடக்கம் செய்தனர். அந்த இடத்திற்கு அல்லோன் பாகூத் என்று பெயர் வைத்தனர்.
யாக்கோபின் புதிய பெயர்
9பதான் அராமிலிருந்து யாக்கோபு திரும்பி வந்தபோது தேவன் மீண்டும் அவனுக்குக் காட்சியளித்தார், தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார். 10தேவன், யாக்கோபிடம், “உன் பெயர் யாக்கோபு, உன் பெயர் இனி யாக்கோபு என அழைக்கப்படாது. உன் பெயர் இஸ்ரவேல் எனப்படும்” என்று கூறி அவனுக்கு “இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.
11தேவன் அவனிடம், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். உனக்கு இந்த ஆசீர்வாதத்தைத் தருவேன். நீ நிறைய குழந்தைகளைப் பெற்று ஒரு நாட்டை உருவாக்குவாய். வேறு ஜாதிகளின் கூட்டமும், ராஜாக்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள். 12நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் சிறந்த இடங்களைக் கொடுத்திருந்தேன். இப்போது அதனை உனக்குக் கொடுக்கிறேன். உனக்குப் பின்னால் வரும் உன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்” என்றார். 13பிறகு தேவன் அந்த இடத்தை விட்டு எழுந்தருளிப் போனார். 14-15யாக்கோபு தேவன் தன்னோடு பேசின அந்த இடத்தில் ஒரு ஞாபகக் கல் நிறுத்தி அதில் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் ஊற்றினான். இது ஒரு சிறப்பான இடம். ஏனென்றால் அதுதான் தேவன் அவனிடம் பேசிய இடம். எனவே யாக்கோபு அதற்கு “பெத்தேல்” என்று பெயரிட்டான்.
ராகேல் மரணமடைதல்
16யாக்கோபும் அவனது கூட்டமும் பெத்தேலை விட்டுப் புறப்பட்டது. எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. அப்போது ராகேல் பிள்ளை பெற்றாள். 17ஆனால் பிரசவ வேதனை அதிகமாக இருந்தது. தாதியோ, “பயப்படாதே நீ இன்னொரு குழந்தையையும் பெறுவாய்” என்றாள்.
18ஆனால் அவள் ஆண் குழந்தை பெறும்போதே மரித்துபோனாள். மரிக்கும் முன்னால் தன் குமாரனுக்குப் பெனோனி என்று பெயர் சூட்டினாள். ஆனால் யாக்கோபு அவனைப் பென்யமீன் என்று அழைத்தான்.
19ராகேல் எப்பிராத்தாவுக்குப் போகும் சாலை ஓரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாள். (எப்பிராத்தா என்பது பெத்லேகம் ஆகும்) 20யாக்கோபு அதில் ஒரு சிறப்பான கல்தூணை நட்டு ராகேலின் கல்லறையைப் பெருமைப்படுத்தினான். இன்றும் அக்கல் (தூண்) உள்ளது. 21இஸ்ரவேல் (யாக்கோபு) தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏதேர் கோபுரத்திற்குத் தென் பகுதியில் கூடாரமிட்டான்.
22இஸ்ரவேல் அங்கு கொஞ்சக்காலமே தங்கினான். அப்போது ரூபன், தன் தந்தையின் வேலைக்காரியான பில்காளோடு பாலின உறவு கொண்டதை அறிந்து இஸ்ரவேல் கடுங்கோபம் கொண்டான்.
இஸ்ரவேலின் குடும்பம்
யாக்கோபிற்கு (இஸ்ரவேலுக்கு) 12 குமாரர்கள் இருந்தார்கள்.
23ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர் யாக்கோபுக்கும் லேயாளுக்கும் முதலில் பிறந்தவர்கள்.
24யோசேப்பும் பென்யமீனும் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்தவர்கள்.
25தாண், நப்தலி ஆகிய இருவரும் யாக்கோபுக்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள்.
26காத், ஆசேர் இருவரும் யாக்கோபுக்கும் சில்பாளுக்கும் பிறந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் பதான் அராமில் யாக்கோபிற்குப் (இஸ்ரவேலுக்கு) பிறந்தவர்கள்.
27யாக்கோபு தனது தந்தை ஈசாக்கு இருந்த கீரியாத் அர்பாவிலிருந்த மம்ரேக்கு சென்றான். அங்கேதான் ஆபிரகாமும் வாழ்ந்தான். 28ஈசாக்கு 180 ஆண்டுகள் வாழ்ந்தான். 29பிறகு ஈசாக்கு பலவீனமாகி மரித்துப் போனான். அவன் நீண்ட முழுமையான வாழ்க்கை வாழ்ந்தான். ஏசாவும் யாக்கோபும் ஆபிரகாமை அடக்கம் செய்த இடத்திலேயே ஈசாக்கையும் அடக்கம் செய்தனர்.

Արդեն Ընտրված.

ஆதியாகமம் 35: TAERV

Ընդգծել

Կիսվել

Պատճենել

None

Ցանկանու՞մ եք պահպանել ձեր նշումները ձեր բոլոր սարքերում: Գրանցվեք կամ մուտք գործեք