மாற்கு 2

2
இயேசு முடக்குவாதக்காரனைக் குணமாக்குதல்
1சில நாட்களுக்குப் பின், இயேசு திரும்பவும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டில் இருக்கின்றார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள். 2எனவே மக்கள் அங்கு திரளாய் கூடி வந்தார்கள். இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியிலும்கூட இடம் இல்லாமற் போயிற்று. அவர் அவர்களுக்கு வார்த்தையைப் போதித்தார். 3அப்போது நான்கு பேர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள். 4ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவிடம் கொண்டுவர முடியவில்லை; எனவே அவர்கள், இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்து திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனை அவன் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள். 5இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
6அங்கே அமர்ந்திருந்த நீதிச்சட்ட ஆசிரியர்கள் சிலர் தங்கள் இருதயங்களில், 7“இவன் ஏன் இப்படிப் பேசுகின்றான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
8அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதை இயேசு உடனே தமது ஆவியில் அறிந்து கொண்டார். எனவே அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? 9நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது இலகுவானது? 10ஆயினும், பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்” என்று சொல்லிவிட்டு, அவர் முடக்குவாதக்காரனிடம், 11“நான் உனக்குச் சொல்கின்றேன், எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, வீட்டுக்குப் போ” என்றார். 12உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்து சென்றான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
இயேசு லேவியை அழைத்தல்
13திரும்பவும் இயேசு புறப்பட்டு, கடலோரமாகச் சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; அவர் அவர்களுக்குப் போதித்தார். 14பின்பு அவர் தொடர்ந்து நடந்து போகையில், அல்பேயுவின் மகனான லேவி, வரி சேகரிக்கும் இடத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்போது லேவி எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான்.
15இயேசு லேவியின் வீட்டில் விருந்து உண்ணும்போது, வரி சேகரிப்போர் பலரும் பாவிகளும் அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சேர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள். 16அவர் பாவிகளோடும் வரி சேகரிப்போருடனும் உண்டு கொண்டிருப்பதை, நீதிச்சட்ட ஆசிரியர்களான பரிசேயர்கள் கண்டபோது, “அவர் ஏன் வரி சேகரிப்போருடனும் பாவிகளோடும் சேர்ந்து உண்கிறார்?” என அவருடைய சீடர்களிடம் கேட்டார்கள்.
17இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “நலமாய் இருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை. வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
உபவாசத்தைப்பற்றி இயேசுவிடம் கேள்வி
18அந்நாட்களில் யோவானுடைய சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் இயேசுவிடம் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசம் செய்கின்றார்கள். ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன் உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.
19அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, அவனுடைய விருந்தின நண்பர்கள் உபவாசம் இருக்க முடியுமோ? மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவர்கள் உபவாசமிருக்க முடியாது. 20ஆயினும், மணமகன் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.
21“ஒருவனும் ஒரு புதிய துணித் துண்டை பழைய உடையில் ஒட்டுப் போட்டுத் தைக்க மாட்டான். அப்படிச் செய்தால், புதிய துண்டு பழைய உடையிலிருந்து இழுபட்டு கிழிந்து, கிழிந்த இடம் முன்னிருந்ததைவிட பெரிதாகி விடும். 22ஒருவனும் புதிய திராட்சை ரசத்தைப் பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அவன் அப்படி செய்தால், புதிய திராட்சை ரசம் பழைய தோற்பைகளை வெடிக்கச் செய்யும். அதனால் திராட்சை ரசம், தோற்பை ஆகிய இரண்டுமே பாழாய்ப் போகும். அதனாலே அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை ரசத்தைப் புதிய தோற்பைகளில் ஊற்றி வைப்பார்கள்” என்றார்.
இயேசு ஓய்வுநாளின் ஆண்டவர்
23ஒரு ஓய்வுநாளிலே இயேசு, தானியம் விளைந்திருந்த வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அவருடனே கூடப் போய்க் கொண்டிருந்த சீடர்கள், தானியக் கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள். 24பரிசேயர்கள் இயேசுவிடம், “பாரும், நீதிச்சட்டத்தின்படி சபத் ஓய்வுநாளில் தடை விதிக்கப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கின்றார்கள்?” என்று கேட்டார்கள்.
25அதற்கு அவர், “தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாயிருந்தபோது, என்ன செய்தனர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? 26அபியத்தார் தலைமை மதகுருவாய் இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், நீதிச்சட்டத்தின்படி மதகுருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை உண்டதுடன், தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தாரே” என்றார்.
27பின்பு அவர் அவர்களிடம், “மனிதனுக்காகவே ஓய்வுநாள் ஏற்படுத்தப்பட்டது; ஓய்வுநாளுக்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை. 28ஆகவே மனுமகனே ஓய்வுநாளின் ஆண்டவர்” என்றார்.

Jelenleg kiválasztva:

மாற்கு 2: TRV

Kiemelés

Megosztás

Másolás

None

Szeretnéd, hogy a kiemeléseid minden eszközödön megjelenjenek? Regisztrálj vagy jelentkezz be