மத்தேயு 12
12
ஓய்வுநாளின் ஆண்டவர்
1ஒரு ஓய்வுநாளில் இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகச் சென்றார். பசியாயிருந்ததனால், அவருடைய சீடர்கள் தானியக் கதிர்களைப் பறித்து உண்ணத் தொடங்கினார்கள். 2பரிசேயர்கள் இதைக் கண்டபோது, அவரிடம், “பாரும்! உமது சீடர்கள் நீதிச்சட்டத்தின்படி சபத் ஓய்வுநாளில் தடை விதிக்கப்பட்ட காரியத்தைச் செய்கின்றார்களே” என்றார்கள்.
3அதற்கு அவர் பதிலாக, “தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாயிருந்தபோது, அவர் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 4அவர் இறைவனுடைய வீட்டிற்குள் போய், அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை உண்டார்களே. அவர்கள் அப்படிச் செய்தது நீதிச்சட்டத்துக்கு முரணாயிருந்தது. ஏனெனில் அந்த அப்பங்கள் மதகுருக்களுக்கு மட்டுமே உரியவை. 5மேலும், ஓய்வுநாளில் மதகுருக்கள் ஆலயத்தில் வேலை செய்து, ஓய்வுநாளின் சட்டத்தை மீறினாலும், அவர்கள் குற்றமற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என்றுள்ளதை நீதிச்சட்டத்தில் நீங்கள் வாசித்ததில்லையா? 6ஆகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஆலயத்தை விடவும் பெரியவர் இங்கே இருக்கின்றார். 7‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’#12:7 ஓசி. 6:6 என்ற இறைவார்த்தையின் கருத்து உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திருக்க மாட்டீர்கள். 8ஏனெனில், மனுமகனே ஓய்வுநாளின் ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” எனச் சொன்னார்.
9அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெபஆலயத்திற்குள் சென்றார். 10அங்கே ஊனமுற்ற கையையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவைக் குற்றம் காண்பதற்கு பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது நீதிச்சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
11அவர் அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு செம்மறியாடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப் பிடித்து வெளியே தூக்கிவிட மாட்டீர்களா? 12செம்மறியாட்டைவிட மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளில் நன்மை செய்வது, நீதிச்சட்டத்தின்படி சரியானதே” என்றார்.
13அதன்பின் அவர், அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப் போல முற்றிலும் குணமடைந்தது. 14அப்போது பரிசேயர்கள் வெளியே போய், இயேசுவை எப்படிக் கொன்றொழிக்கலாம் என சதித் திட்டம் தீட்டினார்கள்.
இறைவன் தெரிவுசெய்த ஊழியர்
15இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கி, 16தான் யாரென ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என, அவர்களை எச்சரித்தார். 17இறைவாக்கினன் ஏசாயா மூலமாய் கூறப்பட்டது நிறைவேறும்படி, இது நடந்தது:
18“இதோ, நான் தெரிவுசெய்த எனது ஊழியர் இவரே;
நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே.
இவர் மீது என் ஆவியானவரை அமரப் பண்ணுவேன்.
இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார்.
19இவர் வாக்குவாதம் செய்ய மாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்;
யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவும் மாட்டார்கள்.
20நீதிக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் வரை
இவர் நசுங்குண்ட நாணலை முறிக்க மாட்டார்.
புகைந்து அணைந்து கொண்டிருக்கும் திரியைக்கூட அணைக்க மாட்டார்.
21இவருடைய பெயரில் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்.”#12:21 ஏசா. 42:1-4
இயேசுவும் பெயல்செபூலும்
22அப்போது பேய் பிடித்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், வாய் பேச இயலாதவனுமாய் இருந்தான். அவனால் பேசவும் பார்க்கவும் கூடியதாக இயேசு அவனைக் குணமாக்கினார். 23மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர்தான் தாவீதின் மகனோ?” என்றார்கள்.
24ஆனால் பரிசேயர்கள் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பேய்களின் தலைவனாகிய பெயெல்செபூலினாலேயே பேய்களை விரட்டுகிறான்” என்றார்கள்.
25இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம், “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்த அரசும் பாழாய்ப் போகும். தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற, எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது. 26சாத்தானை சாத்தான் விரட்டினால், அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான். அப்படியானால், எப்படி அவனுடைய அரசு நிலைத்து நிற்கும்? 27நான் பெயெல்செபூலைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறேன் என்றால், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் யாரைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும். 28ஆனால் நானோ, இறைவனுடைய ஆவியானவரினால் பேய்களைத் துரத்துகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்திருக்கிறது.
29“மேலும் ஒரு பலசாலியின் வீட்டுக்குள் நுழைந்து, அவனது உடைமைகளைக் கொள்ளையிட வேண்டுமானால், முதலில் அவனைக் கட்டிப் போடாமல் அதைச் செய்வது எப்படி?
30“என்னோடுகூட இராதவன், எனக்கு விரோதமாய் இருக்கின்றான். என்னுடன் இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவன், அவர்களைச் சிதறடிக்கிறான். 31நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஒவ்வொரு பாவமும், நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக, அவரை நிந்திப்பது மன்னிக்கப்பட மாட்டாது. 32மனுமகனுக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது மன்னிக்கப்படவே மாட்டாது. இந்த யுகத்திலோ புது யுகத்திலோ அது மன்னிக்கப்பட மாட்டாது.
33“மரம் நல்லதெனின் அதன் கனிகளும் நல்லதாயிருக்கும். அவ்வாறே மரம் பழுதெனின் அதன் கனிகளும் பழுதானவையாய் இருக்குமே. ஏனெனில் ஒரு மரத்தின் கனிகளைக் கொண்டே மரத்தைப்பற்றி அறிகின்றோம். 34விரியன் பாம்புக் குட்டிகளே! தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள்? ஏனெனில் ஒருவனுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதையே அவனுடைய வாய் பேசும். 35நல்ல மனிதன் தன் உள்ளத்தில் சேர்த்து வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருகின்றான்; தீய மனிதன் தன் உள்ளத்தில் சேர்த்து வைத்திருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருகின்றான். 36ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், மனிதர்கள் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும். 37ஏனெனில், உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாகத் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே, நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.”
யோனாவின் அடையாளம்
38அப்போது பரிசேயரிலும், நீதிச்சட்ட ஆசிரியரிலும் சிலர் அவரிடம் வந்து, “போதகரே, நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கேட்டார்கள்.
39அதற்கு அவர், “கொடுமையும், இறை துரோகமும்#12:39 இறை துரோகமும் – கிரேக்க மொழியில் தகாத உறவு என்றுள்ளது. இது இறைவனுக்குத் துரோகம் செய்வதைக் குறிக்கும். செய்கின்ற இந்த தலைமுறையினர், அற்புத அடையாளத்தைக் கேட்கின்றார்கள். ஆயினும், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றுக்குள் இருந்தது போல, மனுமகனும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் உள்ளே இருப்பார். 41நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார். 42நியாயத்தீர்ப்பின்போது தென்னாட்டு அரசியும்கூட,#12:42 1 இராஜா. 10:1-13 தென்னாட்டு அரசி – சேபா நாட்டின் அரசி. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் தேசத்தின் தென் பகுதியிலிருந்த ஒரு தேசத்தின் அரசி. இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களோடு எழுந்து, இவர்கள் மீது குற்றம் சுமத்துவாள்; ஏனெனில், அவள் பூமியின் மிகத் தொலைவிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாள். ஆனால் இப்பொழுதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார்.
43“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வரண்ட இடங்களுக்கூடாகப் போய், இளைப்பாற இடம் தேடுகிறது; ஆனாலும் அது அதைக் கண்டுபிடிக்க முடியாததால், 44‘நான் விட்டுப் புறப்பட்டு வந்த வீட்டிற்கே#12:44 வீட்டிற்கே – அந்த தீய ஆவியிடமிருந்து விடுபட்ட மனிதனைக் குறிக்கும் திரும்பிப் போவேன்’ என்று சொல்லும். அது அந்த வீட்டிற்கு வரும்போது, அந்த வீடு வெறுமையாயும், கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டும் ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதைக் காணும். 45அப்போது அந்த தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் கொடிதான வேறு ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து, வீட்டிற்குள் புகுந்து அவையெல்லாம் அங்கேயே வசிக்கும். அதனால் அந்த மனிதனுடைய பிந்திய நிலைமை, அவனது முந்திய நிலைமையைவிட மோசமடையும். இவ்விதமாகவே, இந்தக் கொடுமையான தலைமுறையினருக்கும் நடக்கும்” என்றார்.
இயேசுவின் தாயும் சகோதரரும்
46இயேசு கூடியிருந்த மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக் கொண்டிருந்தார்கள். 47#12:47 இந்த வசனம் சில பிரதிகளில் இல்லை.அப்போது ஒருவன் அவரிடம் வந்து, “உமது தாயும், சகோதரர்களும் உம்முடன் பேசுவதற்காக வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
48அவர் அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார். 49பின்பு அவர் தமது சீடர்களைச் சுட்டிக் காட்டி, “இவர்களே எனது தாயும், எனது சகோதரர்களுமாய் இருக்கின்றார்கள். 50எனது பரலோக பிதாவின் மனவிருப்பத்தைச் செய்கின்றவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கின்றார்கள்” என்றார்.
वर्तमान में चयनित:
மத்தேயு 12: TRV
हाइलाइट
शेयर
कॉपी
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.