Logo YouVersion
Eicon Chwilio

ஆதி 12

12
அத்தியாயம் 12
ஆபிராமின் அழைப்பு
1யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும்,#12:1 உன்னுடைய சொந்த ஊரையும், சொந்த குடும்பத்தையும் சொந்தஉறவினர்களையும் உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. 2நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய். 3உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார். 4யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடுகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, 75 வயதுள்ளவனாக இருந்தான். 5ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய மகனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும், ஆரானிலே வாங்கியிருந்த மக்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்திற்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தைச் சென்றடைந்தார்கள். 6ஆபிராம் அந்த தேசத்தில் சுற்றித்திரிந்து சீகேம் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள மோரே என்னும் சமபூமிவரைக்கும் வந்தான்; அந்தக் காலத்திலே கானானியர்கள் அந்த தேசத்தில் இருந்தார்கள். 7யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “உன் சந்ததிக்கு#12:7 பிரதிஷ்டை பண்ணினான் இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்றார். அப்பொழுது அவன் தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 8பின்பு அவன் அந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். 9அதற்குப் பிறகு ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பயணம் செய்தான்.
எகிப்தில் ஆபிராமும் சாராளும்
10அந்த தேசத்திலே பஞ்சம் உண்டானது; தேசத்திலே பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்குவதற்காக அந்த இடத்திற்குப் போனான். 11அவன் எகிப்திற்கு அருகில் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: “நீ பார்ப்பதற்கு அழகுள்ள பெண் என்று எனக்குத் தெரியும். 12எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, நீ என்னுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள். 13ஆகையால், உன்னால் எனக்கு நன்மை உண்டாவதற்கும், உன்னாலே என் உயிர் பிழைப்பதற்கும், நீ உன்னை என்னுடைய சகோதரி என்று சொல்” என்றான். 14ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, எகிப்தியர்கள் அந்தப் பெண்ணை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். 15பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்தப் பெண் பார்வோனுடைய அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். 16அவளால் அவன் ஆபிராமுக்குத் தயவு செய்தான்; அவனுக்கு ஆடுமாடுகளும், ஆண் கழுதைகளும், பெண் கழுதைகளும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், ஒட்டகங்களும் கிடைத்தன. 17ஆபிராமுடைய மனைவியாகிய சாராயிக்காகக் யெகோவா தேவன் பார்வோனையும், அவனுடைய வீட்டார்களையும் கொடிய வாதைகளால் வாதித்தார். 18அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: “நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன்னுடைய மனைவி என்று நீ எனக்குத் தெரிவிக்காமல் போனதென்ன? 19இவளை உன்னுடைய சகோதரி என்று நீ ஏன் சொல்லவேண்டும்? இவளை நான் எனக்கு மனைவியாக்கிக் கொண்டிருப்பேனே; இதோ உன்னுடைய மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ” என்று சொன்னான். 20பார்வோன் அவனைக் குறித்துத் தன்னுடைய மனிதர்களுக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவனுடைய மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

Dewis Presennol:

ஆதி 12: IRVTam

Uwcholeuo

Rhanna

Copi

None

Eisiau i'th uchafbwyntiau gael eu cadw ar draws dy holl ddyfeisiau? Cofrestra neu mewngofnoda