லூக்கா 1
1
முகவுரை
1மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின்#1:1 அல்லது நிச்சயமாக விசுவாசித்த விபரத்தை எழுத அநேகர் இருந்தபடியாலும், 2தொடக்கத்தில் இருந்தே கண் கண்ட சாட்சிகளும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களும் எங்களுக்கு எழுதி கையளித்தபடியாலும், 3நடந்த எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து நானும் கவனமாய் விசாரித்தறிந்ததாலும் அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவதற்கு நான் தீர்மானித்தேன். 4இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விடயங்கள் நம்பகமானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு
5ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், அபியாவின் மதகுரு பிரிவைச் சேர்ந்த, சகரியா என்னும் பெயருடைய ஒரு மதகுரு இருந்தார். இவருடைய மனைவி எலிசபெத், மதகுருவான ஆரோனின் மகள்மார் மூலம் ஆரோனின் வழித்தோன்றலாயிருந்தாள். 6அவர்கள் இருவரும் மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டு, இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். 7ஆனாலும் எலிசபெத் கருத்தரிக்க முடியாதவளாக இருந்ததனால், அவர்களுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை; அவர்கள் இருவரும், வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள்.
8ஒருமுறை சகரியாவின்#1:8 சகரியாவின் – கிரேக்க மொழியில் அவருடைய ஆசாரியப் பிரிவினர் ஆலயத்தில் கடமை புரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக மதகுருவின் பணிகளைச் செய்து வந்தார். 9மதகுருவினருக்குரிய வழக்கத்தின்படி கர்த்தருடைய ஆலயத்துக்குள் சென்று தூபம் காட்டும் பணியைச் செய்பவரை தெரிவுசெய்ய சீட்டுக்குலுக்கிப் போடப்பட்டபொழுது, சகரியா தெரிவு செய்யப்பட்டார். 10தூபம் காட்டும் வேளை வந்தபோது, வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள், கூட்டமாக வெளியே ஜெபம்செய்து கொண்டிருந்தார்கள்.
11அப்போது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான். 12அப்போது சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டார், பெரும் பீதி அவரை பற்றிக்கொண்டது. 13அந்தத் தூதனோ அவரைப் பார்த்து: “சகரியாவே பயப்படாதீர்! உமது மன்றாடல் கேட்கப்பட்டது. உமது மனைவி எலிசபெத் உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். நீர் அவனுக்கு யோவான் என்ற பெயரைச் சூட்டுவீராக! 14அவன் உமக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்பும் தருவான். அவனுடைய பிறப்பின் காரணமாக, அநேகர் மனமகிழ்ச்சியடைவார்கள்; 15ஏனெனில் அவன் கர்த்தருடைய பார்வையில் உயர்வானவனாய் இருப்பான். அவன் ஒருபோதும் திராட்சைரசத்தையோ மதுபானத்தையோ குடிக்கக் கூடாது. அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான். 16அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான். 17அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு#1:17 கர்த்தருக்கு – கிரேக்க மொழியில் அவருக்கு முன்பாக நடந்து, தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகளின் பக்கமாகவும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்துக்கும் திருப்பி, கர்த்தருக்காக மக்களை தயார்படுத்தி ஆயத்தம் செய்வான்” என்றான்.
18அப்போது சகரியா அந்த தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எவ்வாறு நம்பலாம்? நான் வயோதிபனாய் இருக்கின்றேன். என் மனைவியும் வயது முதிர்ந்தவளாய் இருக்கின்றாளே” என்றார்.
19அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் பிரசன்னத்தில் நிற்கின்ற காபிரியேல். உம்மிடம் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உமக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். 20ஆனாலும், நீரோ குறித்த காலத்தில் நிறைவேறப் போகின்ற என் வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இப்போதிலிருந்து இவையெல்லாம் நிகழும் நாள்வரை நீர் பேச முடியாதவராக மௌனமாய் இருப்பீர்” என்றான்.
21அதேவேளையில் சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவர் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 22அவர் வெளியே வந்தபோது, அவரால் அவர்களோடு பேச முடியவில்லை. அதனால் அவர் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் பேச முடியாதவராக இருந்தபடியால் அவர்களுடன் சைகை மூலமாக பேசினார்.
23அவர் தனது பணி செய்யும் காலம் முடிவடைந்தபோது, தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார். 24இந்த நாட்களுக்குப் பின் அவரது மனைவி எலிசபெத் கருத்தரித்து, ஐந்து மாதங்களாக பிறர் கண்ணில் படாமலிருந்தாள். 25அப்போது அவள், “கர்த்தரே இதைச் செய்தார். இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவு காட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
இயேசுவின் பிறப்பின் முன்னறிவிப்பு
26ஆறாம் மாதத்தில், கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்ற பட்டணத்திலுள்ள ஒரு கன்னிப்பெண்ணிடம், தூதன் காபிரியேலை இறைவன் அனுப்பினார். 27அந்த கன்னிப்பெண்ணின் பெயர் மரியாள். அவள் தாவீதின் வழித்தோன்றலான யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். 28அந்தத் தூதன் அவளிடம் வந்து, “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கின்றார்”#1:28 சில பிரதிகளில் பெண்களுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதுவும் சேர்க்கப்பட்டுள்ளது என்றான்.
29அவன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்தவளாய், இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள். 30அப்போது அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய். 31நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்ற பெயரைச் சூட்டுவாயாக! 32அவர் உயர்வானவராய் இருப்பார். அதிஉன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். 33அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய இராச்சியம் ஒருபோதும் முடிவு பெறாது” என்றான்.
34அப்போது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எவ்வாறு நடக்கும்? இன்னும் நான் கன்னியாய் இருக்கின்றேனே” என்றாள்.
35அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார், அதிஉன்னதமானவரின் வல்லமை உன்னை சூழ்ந்துகொள்ளும். எனவே பிறக்கப் போகும் குழந்தை#1:35 சில பிரதிகளில் உன்னிடத்தில் பிறக்கப் போவது என்றுள்ளது பரிசுத்தமானது என்றும், இறைவனின் மகன் என்றும் அழைக்கப்படுவார். 36இதோ! உனது உறவினளான எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க இருக்கின்றாள். கருத்தரிக்க முடியாதவள் என எண்ணப்பட்டவள் இப்போது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன. 37இறைவனால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை” என்றான்.
38அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமைப்பெண். நீர் கூறிய வார்த்தைகளின்படி எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது தூதன் அவளை விட்டுச் சென்றான்.
மரியாள் எலிசபெத்தை சந்தித்தல்
39அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்துக்கு ஆர்வத்தோடு விரைந்து சென்றாள். 40அங்கே அவள் சகரியாவின் வீட்டுக்குள் சென்று, எலிசபெத்துக்கு ஆசி கூறினாள். 41மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும், அவளுடைய வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. அப்போது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, 42உரத்த குரலில், “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப் போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது! 43எனது ஆண்டவரின் தாய் என்னிடம் வர, நான் எத்தகையதான தயவு பெற்றேன்! 44உமது வாழ்த்துதலின் ஒலி கேட்டதுமே, எனது வயிற்றில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று. 45கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவள்!” என்றாள்.
மரியாளின் பாடல்
46அப்போது மரியாள்:
“என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
48ஏனெனில், அவர் தமது
அடிமையின் தாழ்மையைத் தயவுடன் பார்த்தார்.
இதோ! இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும்
என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்.
49ஏனெனில் வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்.
பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
50அவருக்குப் பயப்படுகின்றவர்களுக்கு,
தலைமுறை தலைமுறையாக இரக்கம் காண்பிக்கிறார்.
51அவர் தமது வலிய கரத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்;
தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை சிதறடித்தார்.
52ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தி,
தாழ்மையானவர்களையோ உயர்த்தினார்.
53பசியுடன் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பி,
செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
54ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் என்றென்றும் இரக்கம் காண்பிப்பேன் என,
55அவர் நம்முடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவில்கொண்டு,
தமது பணியாளனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்”
என்று பாடினாள்.
56மரியாள் மூன்று மாதங்கள் எலிசபெத்துடன் தங்கியிருந்து, அதன் பின்னர் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.
யோவான் ஸ்நானகனின் பிறப்பு
57எலிசபெத்திற்கு குழந்தைப்பேறுக்கான காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 58அவளுடைய அயலவர்களும், உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
59எட்டாம் நாளில், பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்வதற்காக அயலவர்களும் உறவினர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தந்தையின் பெயரின்படியே, சகரியா என்று பெயரிட நினைத்தார்கள். 60ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்று அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
61அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினர்களுள் அந்தப் பெயருடைய எவரும் இல்லையே” என்றார்கள்.
62பின்னர் அவர்கள் பிள்ளையின் தந்தை என்ன பெயரிட விரும்புகின்றார் என்று அறிவதற்கு, அவரிடம் சைகையினால் வினவினார்கள். 63அவர் ஒரு கற்பலகையைக் கேட்டு வாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினார். 64உடனே அவரது வாய் திறக்கப்பட்டு பேசத் தொடங்கி, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார். 65அயலவர்கள் எல்லோரும் திகிலடைந்தார்கள். இந்தக் காரியங்களைக் குறித்து யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள். 66இதைக் கேள்வியுற்ற எல்லோரும், “இந்தப் பிள்ளை எவ்வாறானதாக இருக்குமோ?” என தங்கள் மனதுக்குள் சிந்தனை செய்தார்கள். ஏனெனில், கர்த்தரின் கரம் அவனுடன் இருந்தது.
சகரியாவின் பாடல்
67அந்தப் பிள்ளையின் தந்தையான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
68“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக!
ஏனெனில் அவர் தம்முடைய மக்களைத் தேடி வந்து மீட்டுக்கொண்டார்.
69அவர் தமது அடியவன் தாவீதின் குடும்பத்திலிருந்து,
நாம் இரட்சிப்பு அடைவதற்கான வல்லமையான இரட்சணியக் கொம்பை#1:69 இரட்சணியக் கொம்பை – இதற்கு மக்களைக் காப்பாற்றும் வல்லமையான அரசன் என்று பொருள். எழுப்பியிருக்கிறார்.
70இதை தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாக,
நெடுங்காலத்துக்கு முன்பே அவர் சொல்லியிருந்தார்.
71அதன்படி, நம்முடைய பகைவரிடமிருந்தும்,
நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும்
நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
72அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து,
நம்முடைய முற்பிதாக்களுக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருக்கின்றார்.
73மேலும், நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருக்கின்றபடி,
74நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து,
அவருக்கு முன்பாகப் பயமின்றி பணி செய்யவும்,
75நாம் உயிரோடிருக்கின்ற காலமெல்லாம்
அப்பணியை பரிசுத்தத்தோடும் நீதியோடும் செய்யவும் நமக்கு வழியமைத்தார்.
76“என் பிள்ளையே, நீயோ, அதிஉன்னதமானவருடைய இறைவாக்கினன் என்று அழைக்கப்படுவாய்;
ஏனெனில், நீ கர்த்தருக்கு வழியை ஏற்பாடு செய்வதற்காக அவருக்கு முன்பாகப் போய்,
77அவருடைய மக்களுக்கு தங்களது பாவங்கள் மன்னிக்கப்படுவதனால் கிடைக்கவிருக்கின்ற
இரட்சிப்பு பற்றிய அறிவைத் தெரிவிப்பாய்.
78நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தினாலே,
பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மிடம் வருகின்றது.#1:78 நம்மிடம் வருகின்றது – சில பிரதிகளில் நம்மை சந்தித்திருக்கிறது என்றுள்ளது
79அது இருளில் வாழ்கின்றவர்களுக்கும்,
மரண இருளில் இருக்கின்றவர்களுக்கும் ஒளியைத் தந்து,
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்தும்.”
80குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தான்; அவன் இஸ்ரயேலரின் முன்பாக பகிரங்கமாக வரும் காலம் வரைக்கும் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தான்.
Currently Selected:
லூக்கா 1: TRV
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.