சகரியா 7:4-10
சகரியா 7:4-10 TAOVBSI
அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்? நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்? எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிநிறைந்து சுகமாயிருந்தகாலத்திலும், தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்ற சொல் என்றார். பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.