YouVersion Logo
Search Icon

ரோமர் 11:1-18

ரோமர் 11:1-18 TAOVBSI

இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி: கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது, அவனுக்கு உண்டான தேவ உத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாகவைத்தேன் என்பதே. அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது. அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால் கிரியையானது கிரியையல்லவே. அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள். கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும். புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று, என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ? மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.

Free Reading Plans and Devotionals related to ரோமர் 11:1-18