YouVersion Logo
Search Icon

சங்கீதம் 59

59
59 சங்கீதம்
(சவுல் தாவீதைக் கொல்லுவதற்காக ஏவலாட்களை அனுப்பினபோது அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்)
1என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
2அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
3இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள். கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.
4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணை செய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.
5சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ் செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா)
6அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
7இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
8ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
11அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
12அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா)
14அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக் கொண்டிருப்பார்கள்.
16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17என் பெலனே, உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for சங்கீதம் 59