YouVersion Logo
Search Icon

சங்கீதம் 119:89-176

சங்கீதம் 119:89-176 TAOVBSI

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள் வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும். உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன். நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன். உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன். துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன். உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக் கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன். வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும். என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின் பேரில் நோக்கமாயிருப்பேன். உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே. பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்கவொட்டாதேயும். உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும். மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். உமது அடியேன் மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். நான் சிறியவனும் அசட்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி. உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக் கொள்ளுவேன். அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக் கொள்ளும். உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும். தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள். கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை. நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன். என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன். எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள். கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகேன். உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது. இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். உம்முடைய வசனம் ச­மூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன். பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன். உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக. காணாமற்போன ஆட்டைப் போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.