YouVersion Logo
Search Icon

சங்கீதம் 119:1-88

சங்கீதம் 119:1-88 TAOVBSI

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தமமார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளை விட்டு வழிதப்பவிடாதேயும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மன மகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும். உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது. உமது கற்பனைகளை விட்டு வழி விலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர். நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன். பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக் கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது. என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். மெய்வழியை நான் தெரிந்து கொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும். நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன். என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். இதோ, உம்முடைய கட்டளைகள் மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன். நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன். நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர் நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது. நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது. கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன். உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன். கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர். உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன். நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக. நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக. நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது. புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும். அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டு விடவில்லை. உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.