YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 7

7
7 அதிகாரம்
1என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து,
2என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
3அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதயபலகையில் எழுதிக்கொள்.
4இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
5ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
6நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
7பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன்.
8அவன் மாலைமயங்கும் அஸ்தமன நேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்,
9அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான்.
10அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
11அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.
12சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள்.
13அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
14சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
16என் மஞ்சத்தை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.
17என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
18வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
19புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான்.
20பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
21தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
22உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலும்,
23ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.
24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
25உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.
26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
27அவள் வீடு பாதாளத்துக்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நீதிமொழிகள் 7