எண்ணாகமம் 18
18
18 அதிகாரம்
1பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.
2உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.
3அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,
4உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
5இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.
6ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்கு தத்தமாகக் கொடுத்தேன்.
7ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படக்கடவன் என்றார்.
8பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.
9மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.
10பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
11இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும்; அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.
12அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.
13தங்கள் தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.
14இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.
15மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
16மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.
17மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
18அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.
19இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
20பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.
21இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
22இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள்.
23லேவியர் மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.
24இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
25பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
26நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
27நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
28இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.
29உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
30ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.
31அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.
32இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.
Currently Selected:
எண்ணாகமம் 18: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.