நெகேமியா 8
8
8 அதிகாரம்
1ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
2அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,
3தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
4வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
5எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
6அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
7யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
8அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
9ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்ட போது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
10பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
11லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
12அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
13மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
14அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.
15ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.
16அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம்வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
17இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள் மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.
18முதலாம் நாள்தொடங்கிக் கடைசி நாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாணபுஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.
Currently Selected:
நெகேமியா 8: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.