YouVersion Logo
Search Icon

மாற்கு 7:14-37

மாற்கு 7:14-37 TAOVBSI

பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும், கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று. அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். இயேசு அவளை நோக்கி: முந்திப்பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு; வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி, எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

Free Reading Plans and Devotionals related to மாற்கு 7:14-37