மாற்கு 14:27-53
மாற்கு 14:27-53 TAOVBSI
அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள். பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்லுவது இன்னதென்று அறியாதிருந்தார்கள். அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைப்பண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார் உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான். இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.