YouVersion Logo
Search Icon

மத்தேயு 22:1-22

மத்தேயு 22:1-22 TAOVBSI

இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி, தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.