YouVersion Logo
Search Icon

லூக்கா 4:31-44

லூக்கா 4:31-44 TAOVBSI

பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று. பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் அவளிடத்தில் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார். பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார். உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள். அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.