YouVersion Logo
Search Icon

லூக்கா 23:49-56

லூக்கா 23:49-56 TAOVBSI

அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.