YouVersion Logo
Search Icon

லூக்கா 19:28-48

லூக்கா 19:28-48 TAOVBSI

இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார். அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள். கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள். அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்குவரும் என்றார். பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி: என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார். அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும், ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.