லூக்கா 1:57-80
லூக்கா 1:57-80 TAOVBSI
எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான். அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது. அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.