YouVersion Logo
Search Icon

லேவியராகமம் 10

10
10 அதிகாரம்
1பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
2அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
3அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
4பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
5மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.
6மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.
7நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக்கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.
8 கர்த்தர் ஆரோனை நோக்கி:
9நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
10பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம் பண்ணும்படிக்கும்,
11 கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
12மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
13அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக்கட்டளை பெற்றிருக்கிறேன்.
14அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
15கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
16பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:
17பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்கு கொடுத்தாரே.
18அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப்பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்,
19அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
20மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for லேவியராகமம் 10