யோசுவா 3:7-17
யோசுவா 3:7-17 TAOVBSI
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும். ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். ஜனங்கள் யோர்தானைக் கடந்து போகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோகும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள், சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்துபோனார்கள்.