யோபு 41
41
41 அதிகாரம்
1லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
2அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?
3அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பஞ்செய்யுமோ? உன்னை நோக்கி இச்சகவார்த்தைகளைச் சொல்லுமோ?
4அது உன்னோடே உடன்படிக்கைபண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ?
5ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலே கட்டிவைப்பாயோ?
6கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
7நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
9இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
10அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
11தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
12அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
13அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
14அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
15முத்திரைப் பதிப்புப்போல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் பரிசைகளின் அரணிப்பு மகா சிறப்பாயிருக்கிறது.
16அவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
17அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
18அது தும்முகையில் ஒளி வீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.
19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
20கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
21அதின் சுவாசம் கரிகளைக்கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜூவாலை புறப்படும்.
22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் கூத்தாடும்.
23அதின் உடற்கூறுகள், அசையாத கெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
24அதின் நெஞ்சு கல்லைப்போலவும், ஏந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
25அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
27அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்,
28அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
29அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
32அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.
33பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
34அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.
Currently Selected:
யோபு 41: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.