யோவான் 9:1-23
யோவான் 9:1-23 TAOVBSI
அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான். அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள். இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான். அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து. அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக; இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.