எரேமியா 3
3
3 அதிகாரம்
1ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.
3அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.
4நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி,
5சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.
6யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்பண்ணினாள்.
7அவள் இப்படியெல்லாம் செய்த பின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
8சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
9பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம்பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.
10இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.
12நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.
13நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,
15உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.
16நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள்.
18அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
19நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன்.
20ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம்செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.
22சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.
23குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே.
24இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.
25எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்.
Currently Selected:
எரேமியா 3: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.