ஏசாயா 40:21-28
ஏசாயா 40:21-28 TAOVBSI
நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா? அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார். அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோகும். இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது. யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.