எபிரெயர் 11:20-40
எபிரெயர் 11:20-40 TAOVBSI
விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான். மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்து போனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம்போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.