YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 44

44
44 அதிகாரம்
1பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,
2இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.
3அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டுபோகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள்.
4அவர்கள் பட்டணத்தை விட்டுப்புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?
5அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.
6அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.
7அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.
8எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான் தேசத்திலிருந்து திரும்ப உம்மிடத்துக்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா?
9உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.
10அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.
11அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.
12மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.
13அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.
14யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
15யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.
16அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.
17அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.
18அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.
19உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர்.
20அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.
21அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
22நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.
23அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
24நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம்.
25எங்கள் தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
26அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக்காணக்கூடாது என்றோம்.
27அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்;
28அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
29நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.
30ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,
31அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம்.
32இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.
33இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.
34இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Free Reading Plans and Devotionals related to ஆதியாகமம் 44

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy