எசேக்கியேல் 40
40
40 அதிகாரம்
1நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.
2தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.
3அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலும் இருந்தது; அவர் வாசலிலே நின்றார்.
4அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக்கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.
5இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீளமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலு விரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.
6பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.
7ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்து முழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.
8வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
9பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
10கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது; அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
11பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
12அறைகளுக்குமுன்னே இந்தப் புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப் புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது; ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.
13பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்து முழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது.
14தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.
15பிரவேசவாசலின் முகப்புத் துவக்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.
16வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.
17பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.
18வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்துக்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாயிருந்தது.
19பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறுமுழமாயிருந்தது.
20வெளிப்பிராகாரத்துக்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.
21அதற்கு இப்புறத்தில் மூன்று அறைகளும் அப்புறத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
22அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும், கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதின்மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது.
23வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்கள் இருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.
24பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்தது; அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.
25அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
26அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதற்கு முன்பாக அதின் மண்டபங்களும் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப்புறத்தில் ஒன்றும் அந்தப்புறத்தில் ஒன்றுமாக இருந்தது.
27உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல் துவக்கி மற்றவாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.
28பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.
29அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழுமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
30இருபத்தைந்து முழ நீளமும் ஐந்துமுழ அகலமுமான மண்டபங்கள் சுற்றிலும் இருந்தது.
31அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
32பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
33அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
34அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
35பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்.
36அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
37அதின் தூணாதாரங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் அதின் தூணாதாரங்களில் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; அதில் ஏறுவதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
38அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள்.
39வாசலின் மண்டபத்திலே இந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் அந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரணபலியையும் செலுத்துவார்கள்.
40வடக்குவாசலுக்குள் பிரவேசிக்கிறதற்கு ஏறிப்போகிற வெளிப்புறத்திலே இரண்டு பீடங்களும், வாசலின் மண்டபத்திலுள்ள மறுபுறத்திலே இரண்டு பீடங்களும் இருந்தது.
41வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.
42தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்ற பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.
43நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.
44உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்கு வாசலின் பக்கமாக இருந்தவைகள் தென்திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.
45பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.
46வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக்காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனைசெய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.
47அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.
48பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்று முழமும் அந்தப்புறம் மூன்று முழமுமாயிருந்தது.
49மண்டபத்தின் நீளம் இருபது முழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களில் இந்தப்புறத்திலே ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.
Currently Selected:
எசேக்கியேல் 40: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.