YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 40

40
40 அதிகாரம்
1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.
3அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
4மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
5பொன் தூபப்பீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
6பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
7தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,
8சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,
9அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.
10தகனபலிபீடத்தையும், அதின் சகல பணிமுட்டுகளையும், அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்,
11தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.
12பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
13ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
14அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
15அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார்.
16 கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
17இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது.
18மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,
19வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
20பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
21பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
22பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து,
23அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
24பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
25 கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
26பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
27அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான்.
28பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,
29தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.
30அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.
31அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
32 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
33பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரத்தின் தொங்குதிரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாய் மோசே வேலையை முடித்தான்.
34அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.
35மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமல் இருந்தது.
36வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள்.
37மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள்.
38இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in