யாத்திராகமம் 36
36
36 அதிகாரம்
1அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.
2பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.
3அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
4அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,
5மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
6அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
7செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.
8வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
9ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
10ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.
11இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.
12காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.
13ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.
14வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
15ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.
16ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
17இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
18கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
19சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.
20வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
21ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரைமுழ அகலமுமாயிருந்தது.
22ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
23வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
24அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்ற பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;
25வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான்.
26ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்ற பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
27வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
28வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
29அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.
30அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
31சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
32வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.
33நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனை மட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.
34பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.
35இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,
36அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
37கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,
38அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.
Currently Selected:
யாத்திராகமம் 36: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.