யாத்திராகமம் 28:1-8
யாத்திராகமம் 28:1-8 TAOVBSI
உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக. ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக. அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும். அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக. ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள். அது ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள்த்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும். அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும்.