YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 17:1-7

யாத்திராகமம் 17:1-7 TAOVBSI

பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது. அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான். ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ. அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான். இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.