பிரசங்கி 7
7
7 அதிகாரம்
1பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜனனநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.
2விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.
3நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
4ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும்.
5ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
6மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.
7இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
8ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
10இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
11சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு.
12ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.
13தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?
14வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.
15இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு.
16மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
17மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்?
18நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான்.
19நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப் பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.
20ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
21சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.
22அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.
23இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.
24தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?
25ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதைச் செலுத்தினேன்.
26கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிகக் கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
27காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்:
28என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.
29இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.
Currently Selected:
பிரசங்கி 7: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.