YouVersion Logo
Search Icon

பிரசங்கி 2:17-26

பிரசங்கி 2:17-26 TAOVBSI

ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே. அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே. ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன். ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது. மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே. மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன். என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்? என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்? தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.