உபாகமம் 31:1-8
உபாகமம் 31:1-8 TAOVBSI
பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி: இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான். கர்த்தர் அழித்த எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்கள் தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார். நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார். நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான். பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய். கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.