தானியேல் 8
8
8 அதிகாரம்
1தானியேலாகிய எனக்கு முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்துக்குப்பின்பு, ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம்பண்ணின மூன்றாம் வருஷத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது.
2தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்.
3நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று.
4அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக்கூடாதிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது.
5நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால்பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.
6நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அது வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது.
7அது ஆட்டுக்கடாவின் கிட்டச்சேரக்கண்டேன்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது; அதின் முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்லாமையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது; அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை.
8அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது.
9அவைகளில் ஒன்றிலிருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று.
10அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது.
11அது சேனையினுடைய அதிபதிபரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்தஸ்தானம் தள்ளுண்டது.
12பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.
13பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.
14அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.
15தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில், இதோ, மனுஷசாயலான ஒருவன் எனக்கு எதிரே நின்றான்.
16அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்.
17அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.
18அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத்தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:
19இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்கு அடுத்தது.
20நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்;
21ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா;
22அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.
23அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது மூர்க்கமுகமும் சூதானபேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான்.
24அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக் கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.
25அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்.
26சொல்லப்பட்ட இராப்பகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.
27தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
Currently Selected:
தானியேல் 8: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.