தானியேல் 7
7
7 அதிகாரம்
1பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.
2தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.
3அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.
4முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்துநிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
5பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.
6அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.
7அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இரும்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
8அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.
9நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜூவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.
10அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.
11அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
12மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.
13இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.
14சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.
15தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது.
16சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச் சொன்னது என்னவென்றால்:
17அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள்.
18ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்.
19அப்பொழுது மற்றவைகளையெல்லாம்பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இரும்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப் போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக்குறித்தும்,
20அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளைஅறிய மனதாயிருந்தேன்.
21நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டளவும்,
22இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.
23அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.
24அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,
25உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
26ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.
27வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.
28அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.
Currently Selected:
தானியேல் 7: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.