ஆமோஸ் 5
5
5 அதிகாரம்
1இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.
2இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.
3நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.
4 கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
5பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்.
6 கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும்.
7நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள்.
8அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளை பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
9அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.
10ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.
11நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைசுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
12உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
13ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
14நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.
15நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
16ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
17எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.
19சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
20 கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?
21உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.
22உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.
23உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
24நியாயம் தண்ணீரைப்போலவும், நீதிவற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.
25இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
26நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திரராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.
27ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
Currently Selected:
ஆமோஸ் 5: TAOVBSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
Free Reading Plans and Devotionals related to ஆமோஸ் 5

The Worship Priority

BibleProject | God Addresses His People

Reading the Bible in Historical Sequence Part 6
