YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலர் 20:1-16

அப்போஸ்தலர் 20:1-16 TAOVBSI

கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான். அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையனாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள். இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள். பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம் பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம். அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம். அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து, பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்க வேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம்.