YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலர் 10:24-48

அப்போஸ்தலர் 10:24-48 TAOVBSI

மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே. நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

Free Reading Plans and Devotionals related to அப்போஸ்தலர் 10:24-48