YouVersion Logo
Search Icon

2 இராஜாக்கள் 17:24-41

2 இராஜாக்கள் 17:24-41 TAOVBSI

அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள். அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது. அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள். அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான். அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். ஆனாலும் அந்தந்த ஜாதி தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள். பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும், ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள். அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள். இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை. கர்த்தர் இவர்களோடே உடன்படிக்கைபண்ணி, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்களுக்குப் பலியிடாமலும், உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு, அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார். ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள். அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.

Free Reading Plans and Devotionals related to 2 இராஜாக்கள் 17:24-41