YouVersion Logo
Search Icon

2 சாமுவேல் 6

6
6 அதிகாரம்
1பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
2கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய்,
3தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
4அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
5தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள்.
6அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
7அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
8அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.
9தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,
10அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.
11 கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
12தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.
13 கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
14தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழு பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.
15அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
16 கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
17அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.
18தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,
19இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.
20தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
21அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
22இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
23அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for 2 சாமுவேல் 6