2 சாமுவேல் 12
12
12 அதிகாரம்
1 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.
2ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
3தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
4அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.
5அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
6அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
7அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
8உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
9 கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
10இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
11 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
12நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.
13அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.
14ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
15அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.
16அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளே போய், இராமுழுவதும் தரையிலே கிடந்தான்.
17அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
18ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்: பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.
19தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக் கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான்; செத்துப்போயிற்று என்றார்கள்.
20அப்பொழுது தாவீது தரையை விட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போஜனம் கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான்.
21அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம் பண்ணுகிறீரே என்றார்கள்,
22அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.
23அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
24பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்.
25அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.
26அதற்குள்ளே யோவாப் அம்மோன் புத்திரருடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, ராஜதானியைப் பிடித்து,
27தாவீதினிடத்தில் ஆள் அனுப்பி, நான் ரப்பாவின்மேல் யுத்தம்பண்ணி, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்துக்கொண்டேன்.
28நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பேர் வழங்காதபடிக்கு, நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றிக்கைபோட்டு, பிடிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
29அப்படியே தாவீது ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப் போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்தான்.
30அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டுபோனான்.
31பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இரும்புப் பாரைகளுக்கும், இரும்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.
Currently Selected:
2 சாமுவேல் 12: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.