YouVersion Logo
Search Icon

2 கொரிந்தியர் 11:16-33

2 கொரிந்தியர் 11:16-33 TAOVBSI

பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன். நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே. ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார். தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக்காத்தான்; அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.